பிரதமர் மோடியின் அறிவுரையின்படி இந்தியர்கள் அடுத்த 21 நாள்களுக்கு வீட்டிலேயே இருங்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 40 பேர் குணமாகி உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினர்.
அப்போது நேற்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அடுத்த 21 நாள்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்தக் கோரிக்கைக்கு அரசியல் சார்பற்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல பிரபலங்களும் பொது மக்களிடையே இதே கோரிக்கையை முன்வைத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெவின் பீட்டர்சன் " வணக்கம் இந்தியா. எங்கள் நாட்டில் எத்தகைய நிலையில் இருக்கிறோமோ அதே நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என அறிகிறேன். பிரதமர் மோடி 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். அனைவரும் இதனை கடைப்பிடியுங்கள். நாம் இணைந்து கொரோனா வைரஸை விரட்ட போராடுவோம், இதிலிருந்து மீள்வோம். வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம்" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.