கொரோனா வைரஸ்

காஞ்சிபுரம்: தேர்தல் பரப்புரை ஏற்பாடுகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் கொரோனா பரவும் அபாயம்

காஞ்சிபுரம்: தேர்தல் பரப்புரை ஏற்பாடுகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் கொரோனா பரவும் அபாயம்

kaleelrahman

தேர்தல் விதியை காற்றில் பறக்கவிட்ட அதிமுக பிரச்சாரக் கூட்டம் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில், தேர்தல் நேரத்தில் நடந்த பிரசாரக் கூட்டங்களில், பேரணிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இப்போது நிலவும் சூழ்நிலைக்கு தேர்தல் கமிஷன்தான் முழு காரணம். இந்த நீதிமன்றம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.. பின்பற்றுங்கள்.. என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்த போதும், அரசியல் கட்சி பேரணிகளில் சமூக இடைவெளியை பின்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரசார கூட்டங்களிலும், பேரணிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றாததால்தான் இப்போதைய பரவல் ஏற்பட்டுள்ளது என்று கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

பலருக்கு கொரோனா நோயின் அறிகுறியே இல்லாமல் இருப்பதால், சமூக இடைவெளி இல்லாத இடங்களில் அவர்கள் மூலம் நிறைய பேருக்கு கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு இப்போது மக்களிடையே அதிகமாக இருப்பதுபோல, சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

முககவசம் அணியாதவர்கள் மீது போலீசாரும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுப்பதுபோல, சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் முகக்கவசம் அணியுங்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் நிலையில் சமூக இடைவெளி குறித்து எந்தவிதமான ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை

அந்த வகையில் தற்போது நடைபெறக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் தேர்தல் விதி மீறி திருமண மண்டபம் வளாகம் முழுவதும் பொது மக்களால் நிரம்பி வழிந்தது காற்று புக முடியாத அளவுக்கு ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் பெரும்பாலான தொண்டர்கள் முகக்கவசம் அணியாமல் போதிய விழிப்புணர்வு ஏதும் இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தனர்.

மேலும் கிராம பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள் தங்கள் கை குழந்தைகளையும் பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார்கள் கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட நபர்களுக்கு கணிசமான தொகை கொடுத்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் வயதான முதியவர்கள் பெண்மணிகள் இளம்பெண்கள் கைக்குழந்தைகள் எனப் பெரும்பாலானோர் தனிமனித இடைவெளி எதுவும் இல்லாமல் முகக் கவசம் அணியாமல் கூட்டத்தில் அல்லல் பட்டார்கள்.

நடைபெறுகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் இருக்கக்கூடிய நபர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் என்பது நடைபெறுகிறது. அதேபோல் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு மாங்காடு குன்றத்தூர் நகராட்சியில் வசிக்கக்கூடிய பகுதிவாசிகளுக்கு உண்டான பிரச்சாரக் கூட்டம் ஆனால் குறிப்பிட்ட பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதியில் இருந்து வந்த மக்களை விட ஊராட்சி பகுதிகளில் இருந்தும் கிராம பகுதிகளில் இருந்தும் மக்களை அதிக அளவு அழைத்து வந்தது அப்பட்டமாக தெரிந்தது.

நோய்த் தொற்று பாதிப்பு குறித்து ஊராட்சிகளிலும் கிராம பகுதிகளிலும் விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவாக இருக்கிறது என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எனவே மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் உள்ளரங்கு பிரச்சாரக் கூட்டங்களில் வரக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் தான் இருக்குது என்பதை காண்பித்த பிறகு அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்ற நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையை உள்ளது.

அனைவரும் முககவசம் அணிந்திருக்கிறார்களா?, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதில்தான், தற்போதைய கொரோனா பரவலை குறைக்கவும் முடியும். கொரோனாவுக்கு விடை கொடுக்கவும் முடியும் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை இது தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் நோய்தொற்று தீவிரமடைய கூடிய நிலையில் இருக்கிறது என மருத்துவத் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்சூழலில் இதுபோன்ற பிரச்சாரங்களில் தேர்தல் விதி மீறி சமூக தொற்றாத நோய் பரவலுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது ஏற்கெனவே நீதிமன்றமும் மத்திய அரசும் தமிழக அரசும் தேர்தல் விதிமுறைகளை கவனமாக கையாள வேண்டும் என எச்சரிக்கை விடுத்து இருந்தும் மாவட்ட நிர்வாகம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அமைதி காத்து வருகிறது

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வத்தை தொடர்புகொண்டு கேட்டபோது திருமண மஹாலில் நடைபெறக்கூடிய பிரச்சாரங்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் மட்டுமே பொறுப்பு அத்துறையை சார்ந்த அதிகாரிகள் தான் நோய்த்தொற்று சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சுகாதாரத் துறையிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார்

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் தொடர்புகொண்டு கேட்டபோது உள்ளரங்கில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் பொழுது அதற்கு உண்டான தேர்தல் விதி வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளோம். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கையும் கண்காணிப்பும் மாநகராட்சி மேற்கொண்டிருக்க வேண்டும். இருப்பினும் இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படும் என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது.. 500 நபர்களுக்கு மேல் அனுமதித்தது காவல்துறையின் தவறு காவல்துறை தான் இதற்கு முழு பொறுப்பு என்றார்.