கொரோனா பாதிப்பை அறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தவர்களுக்கு விரைவாக முடிவுகளை வழங்க வேண்டும் என்றும், தாமதமாகும் முடிவுகள் பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் ஒருநாளில் 30 ஆயிரம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகபட்சமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒருநாளைக்கு சுமார் 10 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. 8 ஆயிரம் மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. தவிர சென்னையில் உள்ள அனைத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு 6 முதல்12 மணி நேரத்திற்குள் முடிவுகள் கிடைத்துவிடுகின்றன. ஆனால் பொதுமக்களுக்கோ 2-3 நாட்கள் ஆகிறது.
மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சராசரியாக 1200 முதல் 1400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் கிடைக்க தற்போது 2முதல் 3 நாட்கள் ஆகிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முதல் அலையின்போது, http:/www.mdmc.ac.in/mdmc/ என்ற இணையதளத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால் 2 ஆம் அலையில் இந்த இணையதள முகவரி செயல்படாமல் உள்ளதால் முடிவுகளை அறிந்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவ பணி சுமை அதிகம் உள்ளதால் கால தாமதம் ஏற்படுவதாகவும், முடிவுகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்த அளவு நாளொன்றுக்கு 6 ஆயிரம் பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. திருச்சி மாநகராட்சியில் 56 பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களிடமும் மாதிரிகள் எடுக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மாதிரிகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்திற்கு சரிவர வருவதில்லை. நாளொன்றுக்கு ஆய்வகத்தில் 4500 மாதிரி முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் கொடுக்கும் மாதிரிகளுக்கு 24 மணி நேரத்தில் முடிவுகள் வருகிறது. 2 தனியார் கொரோனா பரிசோதனை கூடங்களில் 2 நாட்கள் கழித்து முடிவுகள் வருகின்றன.
பெரும்பாலும் பல மாவட்டங்களில் இதேநிலையே காணப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் விரைந்து தெரியவந்தால், தொற்று பரவல் குறையும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.