கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தவும் அதை பரவாமல் தடுக்கவும் மருந்து கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் பலரும் மூளையை கசக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை எப்படி தாக்குகிறது என்பதை சீன விஞ்ஞானிகள் நவீன மைக்ரோஸ்கோப் கருவிகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் இதயம், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் குடல் செல்களில் உள்ள சில ரிசப்டர்களை இந்த வைரஸ் பயன்படுத்திக்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நுரையீரலில் உள்ள இரண்டு வகையான செல்களை கொரோனா வைரஸ் பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் ரிசப்டர்களை பயன்படுத்தி மனித செல்லுடன் தன்னை இணைத்துகொள்ளும் வைரஸ் அந்த செல்லை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறது. செல்லில் RNA எனப்படும் Ribonuclecie acid- ஐ செலுத்தி நோய் மூலக்கூறை நிலைநிறுத்துகிறது. பின்னர் மேலும் பல வைரஸ்களை உருவாக்கி மற்ற செல்களுக்கும் பரவுகிறது.
இது செல்களை சோர்வடைய செய்து செல் பிறப்பு, இறப்பு விகித சுழற்சியை பாதிப்புக்குள்ளாக்குகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதன்பின் நோய் தடுப்பாற்றலின் கட்டுப்பாட்டை மீறி உடல்முழுக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து உறுப்புகளை செயலிழக்க செய்வதுடன் ரத்தத்தை சுத்திகரிக்க முடியாத நெருக்கடியை சிறுநீரகங்களுக்கு கொடுக்கிறது.
ரத்தம் சுத்திகரிக்கப்படாததால் இதயமும், குடலும் பாதிக்கப்படும். இதனாலேயே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.