தீபாவளி பண்டிகைக்குள் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்பாட்டிற்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்குள் கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்பாட்டுக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் ஏழு, எட்டு நிறுவனங்கள் கோரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர், அவர்களில் மூன்று பேர் மருத்துவ பரிசோதனை இறுதிக் கட்டங்களை அடைந்து விட்டனர். மேலும் பல தயாரிப்பாளர்கள் தடுப்பூசி தயாரிப்பில் வேகமான பணியாற்றி வருகிறார்கள். அதனால் நம் நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 இலட்சத்து 49 ஆயிரத்து 639 பேர். இதுவரை நாட்டில் மொத்தமாக 64,951 பேர் கோரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 28 இலட்சத்து 671 பேராக உள்ளது. இந்த சூழலில் செப்டம்பர் மாதம் முதல் பொதுமுடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. எனவே பண்டிகை காலங்கள் நெருங்குவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்குமோ என்ற கவலை மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.