சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், இருப்பினும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனாவுக்கான லேசான அறிகுறி இருப்பவர்கள், வீட்டிற்குள்ளேயே தனிமைப்பட்டுத்திக்கொள்ளும் வசதி இருந்தால் அதை பின்பற்றிக் கொள்ள வேண்டும். ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சுவாச உதவி இதுவரை தேவைப்படவில்லை. ஆகவே மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டும். ஓமைக்ரான் தொற்று உறுதியானவர்கள் யாருக்கும் நுரையீரல் தொற்றும் இதுவரை ஏற்படவில்லை. முதல்வரின் வலியுறுத்தலின்படி, 217ஆக்சிஜன் உருவாக்கும் இயந்திரங்கள் தற்போது நிலுவையில் உள்ளன. போதுமான அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளது. ஓமைக்ரான் பாதிப்பு இதுவரை அதிகமாகவில்லை என்றாலும், இனி வரும் நாட்களில் அதிகளவில் அதிகரிக்கக்கூடும் என கணித்துள்ளோம். ஆகவே தமிழ்நாட்டில் படிப்படியாக இன்னும் சில நாட்களில் பாதிப்பு உயரும். எனவே மக்கள் கவனத்துடன் இருக்கவும்.
கொரோனாவை பொறுத்தவரை, தொற்று சங்கிலியை தடை செய்ய தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் அனைவரும், பயணம் செய்யும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஓட்டுநர் நடத்துனர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். அவர்கள் மட்டுமன்றி, அனைத்துத்தரப்பினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை போடாதவர்கள், இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் நோய் அறிகுறியே இல்லாமல், ஆக்சிஜன் அளவும் குறையாமல் இருப்பவர்களுக்கு தொற்று உறுதியானால் மருத்துவமனைகளில் அனுமேதிக்கப்படக்கூடாது என நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். அவ்வாறு அனுமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், நோய் தீவிரம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் தேவை அதிகம். இப்படியாக மருத்துவமனை படுக்கைகளில், அறிகுறிகள் மற்றும் ஆக்சிஜன் அளவு பொறுத்தே முன்னுரிமை அளிக்கப்படும். தமிழகத்தில் பொழுதுபோக்கு பார்க் ,உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே அதுபற்றி தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம்.
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களில், தமிழக சுகாதாரத்துறை செயலராக 15-18 வயதினரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், கடந்த 3 நாட்களில் இப்பிரிவினரில் 12 லட்சம் தடுப்பூசி போட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையினரும் சேர்ந்து செயல்பட்டதில், மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இவர்களை கண்டு, பெரியவர்களும் தடுப்பூசி போட தாமாக முன்வர வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு, இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ளாமல் இருந்தால், அவர்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே அனைவரும் இரு டோஸையும் பெறவேண்டும்.
அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களுக்கும் ஒத்துழைக்கவேண்டும். இரு கைதட்டினால் தான் ஓசை வரும் என முதல்வரே கூறியுள்ளார். இதை மக்கள் உணரவேண்டும். பெருநகர பகுதிகளில் கொரனாவை காட்டிலும் ஓமைக்ரான் தொற்று அதிகம் பரவி வருகிறது. ஆகவே அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்" என்றார்.
தொடர்புடைய செய்தி: கொரோனா ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது? - முழுவிவரம்