நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து, உடல்நலக் குறைவு ஏற்படும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்
என மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய உயர்கல்வி மற்றும் பள்ளிக்
கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இருமல், தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்த
வேண்டும் எனவும், உடல்நலக் குறைவு ஏற்படும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு முழுக்கை சட்டை அணிந்து வருவது நல்லது என்றும், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்களை மாணவர்கள்
மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதிகம் பேர் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவுவதை தவிர்க்கும் வழிமுறைகளை குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினரிடம் இளைஞர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என மத்திய அரசு
கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாணவர்களிடம் பள்ளிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே,
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ
வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தேர்வு அறைகளில் முகக் கவசம், கைகளை தூய்மைப்படுத்தும் உபகரணங்களை பயன்படுத்தலாம் என
தெரிவித்துள்ளது.