கொரோனா வைரஸ்

‘வால்வு பொருந்திய மாஸ்குகளை  யூஸ் பண்ணாதீங்க’ மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

JustinDurai

வால்வு பொருத்தப்பட்ட  N-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநர்  ராஜீவ் கார்க், மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''சுவாச சுத்திகரிப்பு வால்வுகள் வைத்து தைக்கப்பட்ட N - 95 முகக் கவசங்கள் அணிவதால் எந்தவித பயனும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முகக்கவசம் ஒருவரிடமிருந்து கொரோனா வைரஸ்கள் வெளியேறுவதை தடுக்காது.  வைரஸ் பரவலை இந்த வகை பொருத்தமற்ற N - 95 முகக் கவசங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே பொதுமக்களும் சுகாதார ஊழியர்களும் தகுந்த முகக் கவசங்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதை அனைவருக்கும் அறிவுறுத்துங்கள்.

மேலும் துணியால் ஆன முகக் கவசங்களை பயன்படுத்துவதற்கு முன்பாக உப்பு கலந்த நீர் அல்லது சுடுதண்ணீரில் ஊறவைத்து சோப்பு போட்டு கழுவி நன்கு காய வைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றொருவர் பயன்படுத்திய முகக்கவசத்தை அணியக்கூடாது. முகக்கவசம் அணியும்போது வாய் மற்றும் மூக்கை இடைவெளியின்றி மறைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.