கொரோனா வைரஸ்

ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு

webteam

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்தான ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் ரெம்டெசிவர் ஊசிக்கு கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையை கருத்தில் கொண்டு ரெம்டெசிவர் ஊசி மற்றும் ரெம்டெசிவர் மருந்தை தயாரிக்க பயன்படும் பீட்டா சைக்ளோடெக்ஸ்டிரின் உள்ளிட்ட மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

இந்த இறக்குமதி வரி விலக்கு அக்டோபர் மாத இறுதி வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ ரெம்டெசிவர் தடுப்பு மருந்து, ஊசி மற்றும் சில முக்கியமான மருந்துமூல பொருட்களுக்கான இறக்குமதிவரி நீக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தியாவில் நேற்று மட்டும் 2 லட்சத்திற்கும் மேலான நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.