கொரோனா வைரஸ்

கொரோனா சிகிச்சைக்கு 5 சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க முயற்சி

கொரோனா சிகிச்சைக்கு 5 சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க முயற்சி

jagadeesh

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாட்டில் குறைந்தபட்சம் ஐந்து பெரிய மருத்துவமனைகளை தனித்து உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தா‌லும், அதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நாட்டில் தனித்த நான்கு அல்லது ஐந்து பெரிய மருத்துவமனைகள் தேவைப்படும் என அரசு கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே இயங்கும்‌ மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட தனித்த வார்டுகளை அமைப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறும் மருத்துவமனை நிர்வாகங்கள் அது மற்ற நோயாளிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றன. எனவே பல்வேறு மாநிலங்களிலும் விடுதிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளை தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தமிழகத்தில் தனியார்‌ மருத்துவமனைகளில் 400 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக தமிழகத்தில் ஆயிரத்து 121 தனிமைப்படுத்தப்பட்‌ட வார்டுகளை உருவாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல, மாநில எல்லையோரப் பகுதிகளில் கூடுதலான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பழைய தொழில்நுட்பக் கல்லூரி விடுதிகளை தயார் செய்யவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.