பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர் ஒருவரின் மனைவி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதால் பலருக்கும் நோய் தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒருவர், இத்தாலிக்கு தேனிலவு சென்றுவிட்டு திரும்பிய பின்னர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி தனிமைப்படுத்தப்பட்டார். எனினும், கடந்த 8ம் தேதி பெங்களூருவிலிருந்து தப்பிய அந்தப் பெண், விமானம் மூலம் டெல்லிக்கு சென்று, அங்கிருந்து ரயில் மூலம் ஆக்ராவிலிருக்கும் தன் பெற்றோர் வீட்டுக்கும் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அதிகாரிகள் ஆக்ராவில் அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் தன் பெண் வீட்டில் இல்லை என்றும் பெங்களூரு திரும்பிவிட்டதாகவும் பெண்ணின் தந்தை கூறியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் தலையீட்ட பின்னர் அதிகாரிகள் வீட்டுக்குள் சென்று அந்தப் பெண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தினர்.
வீட்டில் இருந்த மேலும் 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் விமானம், மற்றும் ரயிலில் பயணித்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனஅஞ்சப்படுகிறது. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.