கொரோனா பரவல் காரணமாக, கோவாவில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உடன், இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மேற்கு வங்கத்திலும் கொரோனா அச்சம் காரணமாக இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஒமைக்ரான் திரிபு கொரோனாவின் பரவல் காரணமாக, தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா பரவும் விகிதம் கடந்த ஒரு வாரமாகவே மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இதை கருத்தில் கொண்டு, பல மாநில அரசுகள் இதுமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்திலும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை; திரையரங்குகள், அழகு நிலையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் , துணிக்கடைகள், நகைக் கடைகள், சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தும், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகள் போன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.