கொரோனா வைரஸ்

”தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதியான முதல் நபர் உள்பட மூவர் குணமடைந்தனர்” அமைச்சர் தகவல்

”தமிழகத்தில் ஒமைக்ரான் உறுதியான முதல் நபர் உள்பட மூவர் குணமடைந்தனர்” அமைச்சர் தகவல்

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில்  ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பழக்கூடை வழங்கி நலம் விசாரித்தார். அவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் அமைச்சர். அப்போது அவர், “ ஒமைக்ரான் பரவல் கட்டுப்பாடு நடவடிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஆலோசனை நடத்திய நிலையில், நாளை தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தனர். பின்னர் தமிழகத்தில்  ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரான நைஜிரியாவில் இருந்த வந்தவரும், அவரது குடுப்பத்தை சேர்ந்த இருவரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினர், அவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழக் கூடை வழங்கி நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் முதல்  ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான நைஜிரியாவில் இருந்து வந்தவர், அவர் சகோதரி மற்றும் சகோதரி மகள் இன்று கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புகின்றனர். அவர்கள் மூவரும் குணமடைந்ததில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. அவர்களை நலம் விசாரித்தேன். லேசான பாதிப்பு இருப்பதாக கூறினர். இவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் குடும்பத்தை சேர்ந்த மீதம் உள்ள 5 நபர்கள் நாளை குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில்  ஒமைக்ரான் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தற்போது அது 31 ஆக குறைந்தது. இன்று ஒரு நாளில் 33 பேருக்கு தொற்று அறிவிக்கப்பட்டாலும்கூட, அவர்கள் அனைவரும் திடீர் என்று இன்று ஒரே நாளில்  ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை. கடந்த 20 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டறிந்தவர்களின் முடிவுகளை தான் தற்போது மத்திய அரசு ஆய்வகம் வெளியிட்டுள்ளது. அதனால்தான் மொத்தமாக பாதிப்பு தெரியவந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி விநியோகம் குறித்து பேசுகையில், “ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் தடுப்புசி போடுவது குறைவாக இருப்பதால் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இந்த வாரம் மயிலாடுதுறை சென்று அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மேலும் தமிழகத்தில் 93 லட்சம் பேர் இரண்டாம் தடுவனை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. வரும் வாரமும் அடுத்த வாரமும் ஞாயிற்றுகிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பேசுகையில், “அனைத்து விழா கொண்டாட்டங்களிலும் தனி மனித கட்டுப்பாடு அவசியம். ஒமிக்ரான் உடல் ரிதியான பாதிப்பு குறைவாக இருந்தாலும் நோய் பரவல் அதிகமாக உள்ளது. ஆகவே எந்த விழா கொண்டாட்டமாக இருந்தாலும் சுய கட்டுப்பாட்டை மக்கள் விதித்துக்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும்  ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி. இருப்பினும் தமிழகத்தில் போதிய மருத்துவ கட்டமைபுகள் தயார் நிலையில் உள்ளது” என்றார்.

முன்னதாக இன்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்து பேசிய செயலாளர் ராதாகிருஷ்ணன், “வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.பி.ஆர் பரிசோதனை செய்ய மத்திய அரசுக்கும் ஆகியவற்றை வலியுறுத்தி உள்ளோம். மேலும் 10% மேல் தொற்று ஏற்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மருத்துவ கட்டமைப்புகளை உயர்த்தி கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு கூறியுள்ளோம். தமிழகத்தில் முன்கூட்டியே இந்த ஏற்பாடுகள் செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

சுகன்யா