கொரோனா வைரஸ்

"குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் ஒப்புதல் இல்லை"- மத்திய அமைச்சர் தகவல்

நிவேதா ஜெகராஜா

குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்த இன்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அப்படி அனுமதி ஏதும் இன்னும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் கூறியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், அதை மருத்துவ பரிசோதனைகளுக்கும் உட்படுத்தியது.

அந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்தது. இந்நிலையில், 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு இத்தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரை செய்து, அந்தப் பரிந்துரையை இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கும் அனுப்பிவைத்ததாக சொல்லப்பட்டது

அவற்றைத் தொடர்ந்து இந்த மருந்துக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படி ஒப்புதல் ஏதும் இன்னும் வழங்கப்படவில்லை என சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் விளக்கம் கூறியுள்ளார். இதுதொடர்பாக நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.