கொரோனா வைரஸ்

“நோயின் தீவிரத்தை புரிந்துகொண்டு கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்” - மருத்துவர் குகானந்தம்

“நோயின் தீவிரத்தை புரிந்துகொண்டு கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்” - மருத்துவர் குகானந்தம்

Sinekadhara

தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருவதையடுத்து இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனவரி 6ஆம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கின்போது அனைத்துவகை வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு குறித்து அரசு மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் குகானந்தம் கூறுகையில், ’’இரவு நேரத்தில் வெளியே நடமாடுவது நோய்ப்பரவலின் வேகத்தை அதிகரிக்கும். குறிப்பாக வயதானவர்களிடையே நோய்ப்பரவலின் வேகம் அதிகமாக இருக்கும். கொரோனா இரண்டாம் அலையின்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் சந்தைகள் மற்றும் பொது வெளிகளில் தொற்று மிகவேகமாக பரவியது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில்தான் பெரும்பாலும் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். இது நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும்.

ஒமைக்ரான் வகையானது டெல்டாவைப்போன்று நுரையீரலை பாதிப்படைய செய்வதில்லை. இருப்பினும் வயதானவர்களும், இணை நோய் உள்ளவர்களும், முன்கள பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பது அவசியம். ஒமைக்ரான் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகளும் அதிகம். அதற்கேற்றார்போல் அரசாங்கமும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கைகளையும் அதிகரித்திருக்கிறது. பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கைகளை கழுவி சுத்தமாக இருத்தல் போன்றவற்றை கடைபிடிப்பது அவசியம்.

குறிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் வேண்டும். மேலும் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்புவரை நேரடி வகுப்புகளுக்கு தடைவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் குழந்தைகள் மூலமாக பெரியவர்களுக்கும் நோய்க்கிருமிகள் எளிதில் பரவலாம். எனவே மக்கள் நோயின் தீவிரத்தை புரிந்துகொண்டு அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும். தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.