செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம், கேரளாவில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடகாவிலும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு 234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை கொரோனாவுக்கு அம்மாநிலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மாநில முதல்வர் சித்தராமையா கடந்த 26ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது காய்ச்சல், இருமல், ஜலதோஷம் மற்றும் பிற கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்கும்படி மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது
குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் பள்ளிகளுக்குவ் வந்தால் இதுகுறித்து பொற்றோருக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி பள்ளி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவரை அனுகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.