கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரை, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு மதுரை, சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக திருத்தணி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மதுரை மீனாட்சியம்மன், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை கோயில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
அதேபோல் சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற முருகன் மற்றும் அம்மன் கோயில்களான வடபழனி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், கந்தசாமி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில் போன்ற இடங்களில் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருத்தணி முருகன் கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், வக்காளியம்மன், மலைக்கோட்டை கோயில்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் குவிவார்கள் என்பதால் நோய்பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் இந்நடவடிக்கையை மேற்கொன்டுள்ளது.