கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவ.30 வரை நீட்டிப்பு

Veeramani

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதமைச்சர் மு.க. ஸ்டாலின், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15ஆம் தேதியுடன் முடியவிருந்த நிலையில் அது இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிவுரையின்படியும் டெங்கு போன்ற மழைக்கால நோய் பரவலையும் தடுக்கும் வகையிலும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கடைகளில் சுத்திகரிப்பு திரவம் பயன்பாடு, சமூக இடைவெளி, முகக் கவசம், உடல் வெப்ப நிலை கருவி உள்ளிட்ட ஏற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ள பகுதிகளில் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்வதுடன் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் அவசிய சேவைகள் தவிர மற்றவற்றுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மழைக்கால நோய்களை தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.