சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்து செல்வதில் தாமதம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தாம் பதிவு செய்த காணொளி ஒன்றை, முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7-வது மண்டலத்துக்கு உட்பட்ட பாடி பகுதியில் பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா நோய் தொற்று உறுதியான நிலையில் நேற்று மதியம் வரை அவரை அழைத்துச் செல்ல சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படாததால் அதிர்ச்சி அடைந்த அவர் காணொளி காட்சி ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.
நோயால் பாதிக்கப்பட்டு தாம் படும் வேதனையை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் அந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் "கடந்த 4 நாட்களுக்கு முன்பு சளி மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தேன். இதனையடுத்து தனியார் ஆய்வகத்தில் சோதனை மேற்கொண்டதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியானது. சுகாதார துறையினரிடம் அழைப்பு வந்ததை அடுத்து என்னை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரும் என காத்திருந்தேன். ஆனால் இன்னும் ஆம்புலன்ஸ் வரவில்லை. எனக்கு தீராத தலைவலி மற்றும் தொண்டைவலி இருக்கிறது. அதற்கான மருந்துகளை கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனது கணவரை மருத்துவமனைக்கு தொற்று குறித்த சோதனை செய்ய அழைத்து சென்றதால் எனக்கு உதவி செய்ய கூட யாரும் இல்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாநகராட்சியின் இதுபோன்ற அலட்சிய செயலால்தான் சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் முன்வைத்துள்ளார். அதேபோல் தமது கணவர் உட்பட உறவினர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அதற்கு அரசு தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.