கோவாக்சின் 3-ஆம் கட்ட பரிசோதனை ஆட்கள் தேர்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வரும் 13-ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3-வது கட்ட க்ளினிக்கல் பரிசோதனை நிறைவுபெறாத நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு 'அவசரகால அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கான ஆட்கள் தேர்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இந்த 3ஆம் கட்ட பரிசோதனையில் 25800 தன்னார்வலர்கள் பங்கேற்க முன்வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.