கொரோனா வைரஸ்

முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் நடவடிக்கை - கோவை ஆட்சியர் எச்சரிக்கை 

முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் நடவடிக்கை - கோவை ஆட்சியர் எச்சரிக்கை 

webteam
அனைத்து தரப்பினரும் பொதுவெளியில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
 
கொரோனா நோய்த் தொற்றுக்காகப் போடப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்தது. அதற்குள் தமிழக அரசு அந்தத் தடையை வரும் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா நோய்த் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த போதும், நோயின் தீவிரம் அதிகரித்தபடியே உள்ளது. 
 
 
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால்,  அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் என  மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
 
மேலும் கொரோனா அறிகுறி இருந்தும் சிகிச்சை பெறாமல் இருப்பவர்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுச் சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தன்னார்வலர்கள் சமைத்த உணவுகளை நேரடியாக விநியோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 
அதனைத்தொடர்ந்து ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊரக பகுதிகளிலும், மாநகரில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், கே.கே.புதூர், கவுண்டம்பாளையம், சேரன்மாநகர் உள்ளிட்ட  குறிப்பிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.