கொரோனா வைரஸ்

சிடிஎஸ் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு: ஹைதராபாத் அலுவலகம் மூடல்

jagadeesh

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தின் காரணமாக ஹைதராபாத்தில் இருக்கும் காக்னிசன்ட் ஐடி நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டது. மேலும், தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடி வேலை செய்யவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை நிறைவடைந்து அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இனி இந்தியாவில் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், இந்தியாவில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கடந்த திங்கட்கிழமை வெளியான செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த நிலையில்தான், இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று தெரிவித்தார். இது பல்வேறு மாநிலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனையடுத்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இயங்கும் ஐடி நிறுவனமான காக்னிசன்ட் தங்களது ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளது, அதில் "ஹைதராபாத் நகரம் ரஹேஜா மைன்ட் ஸ்பேஸ் இடத்தில் இருக்கும் நமது அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக அலுவலகம் மூடப்படுகிறது. மேலும் பாதிப்பை தவிர்க்கவும் சுகாதாரத்துக்காகவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என தெரிவித்துள்ளது.

மேலும், சிலவற்றை தெரிவித்துள்ள அந்த மெயிலில் "இது தற்காலிகமான முடிவுதான். நம்முடைய நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் முறையான அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளலாம்" என குறிப்பிட்டுள்ளது.