கொரோனா வைரஸ்

கேரளாவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா தொற்று - தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Sinekadhara

கேரளாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் கொரேனா தொற்று எண்ணிக்கை மீண்டும் உச்சம் தொட்டிருப்பது தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாநிலத்தில் 31 ஆயிரத்தை தாண்டி தொற்று எண்ணிக்கை பதிவாகி இருப்பதுதான் இதற்கு காரணம். தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடாகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிற்கு தடை தொடர்கிறது. தமிழக - கேரள எல்லைப் பகுதிகளின் வழியாக வந்து செல்பவர்கள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கேரளாவில் கொரோனா வேகமாக பரவிவருவது நமக்கும் கவலையளிப்பதாகவே உள்ளது என தெரிவித்துள்ள மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் திரையரங்குகள் திறப்பு, கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கேரளாவில் இருந்து கொரோனா தொற்று தமிழகத்தில் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியமாகிறது.