தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருவதையடுத்து இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில், பயணம் மேற்கொள்வோருக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.
- ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.
- முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை (09.01.22) பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது.
- 09.01.22 மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக, விமானம் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது பயணச்சீட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
- வார நாட்களில் பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். அதேபோல், மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.
- தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.