கொரோனா வைரஸ்

கொரோனா விரைவுச் செய்திகள் மே 10 - தினசரி பாதிப்பு முதல் ரெம்டெசிவிர் விற்பனை வரை!

கொரோனா விரைவுச் செய்திகள் மே 10 - தினசரி பாதிப்பு முதல் ரெம்டெசிவிர் விற்பனை வரை!

sharpana

1. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்குட்பட்ட 959 குழந்தைகளுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 959 சிறார்கள் 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரையிலான கொரோனா பாதிப்பு 14 லட்சத்து 9 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 20 ஆயிரத்து 904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12 லட்சத்து 40 ஆயிரத்து 968 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 232 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்திலும் பாதிப்பு அதிகபட்சமாக ஒரே நாளில் 7 ஆயிரத்தை கடக்காத நிலையில், தற்போது சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 149 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 781 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 181 பேரும், மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 24 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 8 பேரும், கிருஷ்ணகிரியில் 895 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


2. கொரோனா பாதிப்பு குறையாவிடில் 700 முதல் 800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையில் மே 15 முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் டி.ஆர்.டி.ஓ. மூலம் உற்பத்தி வசதியை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

3. தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தை முன்னிட்டு, அரிசி அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டது.

கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாயை வரும் 15ஆம் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் துரிதமாக கொண்டு சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

4. பொதுமுடக்கத்தை மதிக்காமல் சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மதியம், மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் பயணித்தனர். ஆம்புலன்ஸ், காவல்துறை, ஊடகம் போன்ற முன் கள பணியாளர்களை தாண்டி, பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தனர். பலர் நடைபயிற்சி, மிதிவண்டி பயிற்சி செய்ததையும் சாலைகளில் பார்க்க முடிந்தது. அண்ணா சாலை, ஈ. வே.ரா பெரியார் சாலை, காமராஜர் சாலை, ராஜிவ் காந்தி சாலை, ஜி.எஸ்.டி சாலை போன்ற சென்னையின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.

கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது, காவல்துறையினர், பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க வாகன பறிமுதல், அபராதம் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது டி.ஜி.பி, பொது மக்களிடம் காவல்துறையினர் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் தணிக்கை குறைவாக இருப்பதால் மக்கள் பயமின்றி வெளியே சுற்றித் திரிகின்றனர். எனவே தற்போது பரவி வரும் பெருந்தொற்றை கருத்தில் கொண்டு மக்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அரசும் கண்காணிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

5. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமான சென்னையில் அண்ணா நகர், அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் தொற்று பரவல் பெருமளவில் உள்ளது தெரிய வந்துள்ளது.

மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் சென்னையில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்ணாநகர், அடையாறு, அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் ஆகிய மண்டலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது தெரிய வந்திருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இந்த மண்டலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அதே சமயம் ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், பெருங்குடி, மாதவரம் மண்டலங்களில் தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது. ஆலந்தூர், தேனாம்பேட்டை, மணலி ஆகிய மண்டலங்களில் கொரோனா பரவல் சராசரியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. கோவையில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு அடுத்த இடத்தை கோவை பிடித்துள்ளது. அங்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை மொத்தமாக 97 ஆயிரத்து 713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 13 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவையில் 12 லட்சத்து 13 ஆயிரத்து 404 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 113 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரக்கூடிய சூழலில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், விடுதிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 516 தயார் நிலை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

7. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் ஒரு கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிவிரைவாக 17 கோடி தடுப்பூசிகளை அளித்து இந்தியா உலக சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 9 லட்சத்து 24 ஆயிரத்து 910 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது. இதுவரை, சுமார் 18 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் காலை நிலவரப்படி இதுவரை மொத்தம் 76 லட்சத்து 43 ஆயிரத்து 10 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 8 லட்சத்து 78 ஆயிரத்து 437 தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

8. பீகார் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் ஆற்றில் வீசிய அவலம் நேர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இங்கு கதிஹார் மாவட்டத்தில் சவுரா ஆற்றின் கரையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் வீசப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து கதிஹார் மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா, வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு அது உண்மை என்று கண்டறிந்துள்ளார். இந்த சம்பவம் மே 7-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த கதிஹார் நகர மாஜிஸ்திரேட் உதயன் மிஸ்ரா, எஸ்.டி.ஓ மற்றும் எஸ்.டி.பி.ஓ. தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பின்னர் உதயன் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை பெரியா ரஹிகா கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது உயிரிழந்தவர் கூலித்தொழிலாளி என்றும், அவரது மரணத்திற்கு கொரோனாவே காரணம் எனவும் தெரியவந்தது. இறுதிச்சடங்குகள் செய்ய பணமில்லாததால் ஆற்றில் வீசியதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே கங்கையில் 10 முதல் 12 உடல்கள் தென்பட்டன. கடந்த ஒருவார காலமாக சவுரா ஆற்றில் உடல்கள் மிதப்பதாகவும், வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்களில் இருந்து உடல்கள் வீசப்பட்டிருக்கக்கூடும் என்றும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆற்றில் உடல்களை வீசாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

9. தமிழகத்திற்கு நாள்தோறும் 20ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயலிடம் தொலைபேசி வாயிலாக பேசிய முதலமைச்சர், கூடுதலாக ரெம்டெசிவிர் குப்பிகளை வழங்கினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.

10. கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர தேவைகளுக்கு 24 மணி நேர தொலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஊரடங்கு காலத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்ற 24 மணி நேர தொலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி அவசர தேவைகளுக்கு 94981 81236, 94981 81239 ஆகிய எண்களில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையற்ற ஆக்சிஜன் டேங்கர் போக்குவரத்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் போக்குவரத்துக்கு இந்த எண்களை அழைத்தால் உதவி வழங்கப்படும் என சென்னை காவல்துறை கூறியுள்ளது. அதே போல், தனியாக வசிக்கும் முதியோருக்கு உதவி தேவைப்பட்டால், இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், அத்தியாவசிய பொருட்கள், ரெம்டெசிவிர் மருந்து போக்குவரத்தில் தடை ஏற்பட்டாலும் இந்த எண்களை அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11. சென்னையை தொடர்ந்து மேலும் 5 இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கினாலும், அனைத்து இடங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையே நீடிக்கிறது.

12. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 805 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகளில் 790 மட்டுமே மீதம் உள்ளன.

13. சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் கொரோனா சிகிச்சை மையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. வர்த்தக மையத்தில் ஆயிரம் படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயாராகி வருகிறது. இதில் 800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் பிரத்யேகமாக தயாராகி வருகிறது. சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி நேரடி கண்காணிப்பில் செயல்பட இருக்கும் இந்த மையம் 70 சதவீத பணிகள் முடிந்து இருக்கிறது. ராஜீவ்காந்தி, ஒமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் வர தொடங்கிவிட்டன. நோயாளிகள் பாதுகாப்புக்காக சிசிடிவி வசதி, ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

14. பெல் தொழிற்சாலை உட்பட இதர தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தால், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் நாள்தோறும் 20 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது என்றார். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என்றும், தமிழகத்தில் இருப்பு குறையாமல் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். தமிழகத்தில் பெல் தொழிற்சாலை உட்பட இதர தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்புகள் இருந்தால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும், அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் ஆய்வு மேற்கொண்டார்.

15. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் கடந்த 1-ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டு இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.ஆயினும் தொற்று குறையாததையடுத்து மேலும் பல கட்டுப்பாடுகளுடன் இரவு 10 மணி முதல் வரும் 24 ஆம்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழங்கள் மற்றும் இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறக்க வேண்டும். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களை மூட வேண்டும். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பால் விற்பனை , மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், மருந்தகங்கள், கண் மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், செய்தித்தாள்கள் வினியோகம், ஆம்புலன்ஸ், அனைத்து அவசர கால மருத்துவ சேவைகளும் வழக்கம் போல் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி காலை முதலே பேருந்துகள், ஆட்டோ, டாக்கி, டெம்போக்கள் இயக்கப்படவில்லை.