குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் போதுமான ஆக்ஸிஜன் வசதி இல்லாத காரணத்தால் கொரோனா நோயாளி இறந்துவிட்டதாக எழுந்த புகாரில் மருத்துவமனையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குருகிராம் நகரில் 37வது பிரிவின் கீழ் அமைந்துள்ள சிக்னேச்சர் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதே நகரைச் சேர்ந்த 44 வயது பெண்ணின் மரணத்தால், மருத்துவமனைக்கு எதிராக போலீஸார் வழக்கு பதி செய்துள்ளனர். ஜூன் 1ஆம் தேதி குருகிராமில் ஜோதி பூங்காவில் வசிக்கும் சீமா அரோரா என்ற அந்தப் பெண், சிக்னேச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாத் தொற்று உறுதியான அவர் கோவிட் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் வரும்போது அவர் கையில் கைப்பேசியைக் கொடுத்து வந்துள்ளனர். ஜூன் 5ஆம் தேதி குடுபத்தினரைத் தொடர்புகொண்ட அவர் மருத்துவர்கள் தன்னை சரியாக கவனிக்கவில்லை எனவும், போதுமான ஆக்ஸிஜன் வழங்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதனால் தனது கணவரிடம் தன்னை வேறு மருத்துவமனைக்கு மாற்றும்படிக் கேட்டுள்ளார்.
ஜூன் 9ஆம் தேதி குடும்பத்தினர் அவரை குருகிராமில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சீமா இறந்துவிட்டார்.
சிக்னேச்சர் மருத்துவமனையிலிருந்து கொண்டுசெல்லும்போது ஆம்புலன்சில் போதுமான ஆக்ஸிஜன் அவருக்கு வழங்காதக் காரணத்தால்தான் அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.