கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள கொரோனா தொற்று

தமிழகத்தில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள கொரோனா தொற்று

Veeramani

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே வாரத்தில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 597இல் இருந்து ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையில் மட்டும் ஒரேநாளில் 682 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி தொற்று எண்ணிக்கையான 125ஐ விட சுமார் 5 மடங்கு அதிகம். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி 12 ஆயிரமாக இருந்த பரிசோதனைகள் தற்போது 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் 121 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 120 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் ஆந்திராவில் இருக்கிறார். தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.