கொரோனா வைரஸ்

கேரளாவில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 67 பேர் உயிரிழப்பு

கேரளாவில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 67 பேர் உயிரிழப்பு

Veeramani

கேரளாவில் இன்று  1,15,575 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில்  20,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி வியஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் நேற்று 1,34,861  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில்  20,487 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம்  1,51,317 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 25,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு முதல் நாள் 1,56,957 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 29,200  பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டிருந்தது.

இந்த செப்டம்பர் மாதத்தில் 2ம் தேதிக்குப்பின் கடந்த 8ம் தேதி மீண்டும் தினசரி தொற்று 30 ஆயிரம் கடந்த நிலையில் கடந்த நான்கு  தினங்களாக  தினசரி  தொற்று மீண்டும் 30 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது. அதுவும் கடந்த நான்கு  தினங்களாக தொற்று பதிவு படிப்படியாக குறைந்தவண்ணமே உள்ளது. பரிசோதனைகளை பொறுத்தளவில் நேற்றைவிட  இன்று 19,286 பரிசோதனைகள் குறைந்துள்ளது. தொற்று எண்ணிக்கையும் 247 எண்ணிக்கையில் இன்று குறைந்துள்ளது.

கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,75,431 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை  22,551 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில்  2,22,255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 29,710 பேர் குணமடைந்துள்ளனர், கேரளாவில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 41,30,065 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவின் நேற்று முன்தினம் டிபிஆர் 16.69 ஆக இருந்தது. நேற்று டிபிஆர் 15.19 ஆக குறைந்து, இன்று டிபிஆர் 17.51 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் தொற்று குறைந்திருந்தாலும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தற்காப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே நேரம் கொரோனா விதிமுறை மீறல்களை கண்காணித்து அபராதமும் விதித்து வருகிறது கேரள காவல்துறை.