கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்

jagadeesh

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின், ஜைகோவ் - டி ஆகிய மருந்துகளின் பரிசோதனை, கொரோனா வைரைஸ முடிவுக்கு கொண்டு வருவதற்கான தொடக்கப் புள்ளி என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக இணையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பற்றி கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்து உலகில் எங்கு வேண்டுமானாலும் தயாரிக்கப்படலாம். ஆனால், இந்தியாவின் தலையீடு இல்லாமல் அவற்றை தயாரிப்பதில் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கோவாக்ஸின், ஜைகோவ் - டி ஆகியவற்றுடன் சேர்த்து உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட 11 தடுப்பூசிகள் மனிதர்களின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதே நேரம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின், ஜைடஸ் காடில்லா நிறுவனத்தின் ஜைகோவ் - டி ஆகிய தடுப்பு மருந்துகள் கொரோனா வைரைஸ முடிவுக்கு கொண்டு வருவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என கூறியுள்ளார்.

இவ்விரு தடுப்பூசிகளும் மனிதர்களின் உடலில் செலுத்தி முதல் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் மூன்றாம் கட்ட பரிசோதனையும் நடத்தப்படுவது அவசியம் என்றும் தடுப்பூசி முழுமையாக தயாராக 15 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்றும் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.