ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு சீனா விற்பனை செய்த கொரோனா அதிவிரைவு கொரோனா பரிசோதனை கருவிகள் சரியான முடிவுகள் தரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின், செக் நாடுகளுக்கு சீனா சுமார் ஒன்றரை லட்சம் அதிவிரைவு கொரோனா பரிசோதனை கருவிகளை இம்மாத தொடக்கத்தில் வழங்கியிருந்தது. இந்நிலையில் இவற்றில் 80 சதவிதம் சரியாக வேலை செய்யவில்லை என செக் நாட்டு வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 15 நிமிடங்களில் இவற்றில் சோதனை முடிவுகள் தெரிந்துக்கொள்ள முடிந்தாலும் அவை பெரும்பாலும் துல்லியமாக இல்லை என அவ்வலைத்தளம் கூறியுள்ளது.
இதனால் வழக்கமான ஆய்வக சோதனைகளுக்கு தங்கள் அரசு மீண்டும் திரும்பியுள்ளதாக அவ்வலைத்தளம் கூறியுள்ளது. எனினும் இத்தகவலை செக் துணை பிரதமர் மறுத்துள்ளார். சோதனை செய்த முறையில் தவறுகள் இருந்ததால் தவறான முடிவுகள் கிடைத்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் சீனாவின் பயோ ஈசி என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கிய பரிசோதனை கருவிகளில் 30 சதவிதம் மட்டுமே சரியான முடிவுகளை தந்ததாக ஸ்பெயின் நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து சீனாவிடமிருந்து வாங்கிய பரிசோதனை கருவிகளை திரும்ப அந்நாட்டிடமே தந்து விடப் போவதாக ஸ்பெயின் நாட்டு மருத்துவத்துறை உயரதிகாரி ஃபெர்னான்டோ சிமோன் தெரிவித்தார். தங்கள் நாட்டின் பயோ ஈசி நிறுவனம் பரிசோதனை கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கான பட்டியலிலேயே இடம்பெறவில்லை என ஸ்பெயினுக்கான சீன தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.