கொரோனா வைரஸ்

சென்னை: கடைசி நிமிடத்தில் தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்படும் நோயாளிகள்

சென்னை: கடைசி நிமிடத்தில் தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்படும் நோயாளிகள்

EllusamyKarthik

சென்னையில் முக்கியமான அரசு மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ்களில் காத்திருந்த கொரோனா நோயாளிகளில் சிலர் அங்கேயே உயிரிழந்தனர். கடைசி நிமிடத்தில் தனியார் மருத்துவமனைகளால் நோயாளிகள் கைவிடப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

கோவிட் தொற்றின் அறிகுறிகள் தெரிந்த பிறகு தனியார் மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள் பலர் அங்கு ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை சிகிச்சை பெறுகின்றனர். நோய் அறிகுறிகள் லேசானதாக இருக்கும் வரை அங்கு வைத்து சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் வசதி தொடர்ந்து தேவைப்படும் நோயாளிகளையும், உயிருக்கு ஆபத்தான என்ற நிலையில் இருக்கும் நோயாளிகளையும் கடைசி நிமிடத்தில் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்துவிடுகின்றனர் என தகவல்கள் உள்ளன. இதை ஒரு குற்றச்சாட்டாகவே செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

தனியார் மருத்துவமனைகளால் இவ்வாறு கைவிடப்பட்ட நோயாளிகள் அடுத்து தஞ்சமடைவது அரசு மருத்துவமனைகளில் தான். ஒரே நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் 30 - 40 ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்படுகையில் அவர்கள் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சுமார் 6-8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இது போன்றவர்களில் தான் சிலர் ஆம்புலன்ஸிலேயே இறந்துள்ளனர்.

நோயாளிகளை கடைசி நிமிடத்தில் அனுப்பும் தனியார் மருத்துவமனைகளின் செயலுக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களில் சிலர் உதவுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 108 ஆம்புலன்சுகள் எந்த தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று நோயாளிகளை அழைத்து வரக் கூடாது என்பது விதி. ஆனால் சில 108 ஓட்டுநர்கள் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து ஒரு நோயாளிக்கு 30,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அடுத்த தெருவில் இருந்து அழைத்துக் கொண்டு வந்து ராஜிவ் காந்தி மருத்துவமனையில் விட்டுச் செல்கின்றனர் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

நாடித்துடிப்பு குறைந்த நிலையில் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுவது தங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 ஆக்சிஜன் படுக்கைகள், பொதுப்பணித்துறை ஏற்படுத்தி வருவதாகக் கூறும் 11 ஆயிரத்து 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் இத்தகைய மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என்பதும் உண்மை.