கொரோனா வைரஸ்

கொரோனாவிற்கு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு - காவல்துறையில் 4-வது மரணம்

கொரோனாவிற்கு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு - காவல்துறையில் 4-வது மரணம்

webteam

சென்னையில் கொரோனாவுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.

சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் குருமூர்த்தி (55). இவர் சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். 1986-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர்  அயல் பணியாக மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ரோந்து பணி பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 23-ம் தேதி குருமூர்த்திக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா உறுதியானது.

இதனையடுத்து அவர் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர்  சில நாட்கள்  உடலில் நல்ல முன்னேற்றம்  ஏற்பட்டு வந்த நிலையில் இம்மாதம் 11-ம் தேதி முதல் உடல் நிலை மோசமானது. நினைவு இழந்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலன் அளிக்காமல் குருமூர்த்தி இறந்து போனார்.

இவருக்கு திருமணமாகி கோமதி (49) என்ற மனைவியும், அலமேலு மங்கை (25) என்ற மகளும், தினேஷ்குமார் (21) என்ற மகனும் உள்ளனர். இறந்து போன குருமூர்த்திக்கு சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்.

கொரோனா தடுப்பு முன்களப்பணியாளராக பணியாற்றி வரும் காவல்துறையில்  இது 4-வது உயிரிழப்பு. சென்னை காவல் துறையில் பணியாற்றிய மாம்பலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன், சென்னை ஆயுதப்படை காவலர் நாகராஜன் ஆகியோர் இதுவரை கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். சென்னை காவல்துறையில் இதுவரை 1445 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 849 போலீசார் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.