கொரோனா வைரஸ்

”திருச்சியில் ஊரடங்கு விதியை மீறிய 200 பேர் மீது வழக்குப்பதிவு”- மாநகர காவல் ஆணையர் தகவல்

நிவேதா ஜெகராஜா

திருச்சியில் ஊரடங்கு விதியை மீறிய 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநகர காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, வாரத்தில் ஞாயிறு அன்று ஒருநாள் முழு ஊரடங்கு என அரசு அறிவித்தது. அதன்படி, இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் திருச்சி மாநகரத்தில் மட்டும் 1000 போலீசாரும், திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 3,800 போலீசாரும் பாதுகாப்பு மற்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருவதாக அம்மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாநகரத்தில் மொத்தம் 8 சோதனைச் சாவடிகள் உள்ளன. மேலும் கூடுதலாக 23 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். திருச்சி காந்தி சந்தையானது, நேற்று இரவு 10 மணி முதல் மூடப்பட்டுள்ளது. இச்சந்தையில் உள்ள மொத்த வியாபாரத்திற்கான கடைகள் மட்டும் இன்று இரவு 10 மணி முதல் மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையன்றி மாவட்டத்தில் எஞ்சியுள்ள கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் நாளை காலை 5 மணிக்கு பிறகு திறக்கப்பட உள்ளது.

இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”திருச்சி மாநகரத்தில் ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய 200 பேர் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தாலும், கொரானாவின் ஆபத்தை முழுமையாக உணராமல் இருக்கின்றனர். கொரோனா குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வை பெற வேண்டும்” என்றார்.

திருச்சியை பொறுத்தவரை, தற்போதைக்கு 4,300 மருத்துவ படுக்கைகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “குறிப்பாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், துறையூர் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 5 இடங்களில் கொரோனா நோயாளிகளை தனிமை படுத்துவதற்கான சிறப்பு சிகிச்சை மையங்களும், அவற்றில் மொத்தம் 2,000 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் 1,200 படுக்கைகளும், தனியார் மருத்துவ மனைகளில் 1,100 படுக்கைகளும் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 4,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது” என்றார்.