கொரோனா வைரஸ்

இத்தாலியை தொடர்ந்து பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா !

இத்தாலியை தொடர்ந்து பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா !

jagadeesh

கொரோனா... பிரபஞ்சம் தற்போது அதிகமாக உச்சரிக்கும் வார்த்தை. கண்ணுக்கே தெரியாமல், அனைவரது கண்களிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா. சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலியை வெகுவாக உலுக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நாட்டில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவியதில் இருந்து இந்த அளவுக்கு ஒரே நாளில் இத்தனை உயிர்களை பலி கொண்டதில்லை என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். இதன் மூலம் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியை தொடர்ந்து தற்போது பிரிட்டனையும் கொரோனா வெகுவாக அச்சுறுத்தி வருகிறது. அங்கு உயிரிழப்பு நூறை கடந்து சென்றுவிட்டதால், வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறது பிரிட்டன் அரசு. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். எனினும், திட்டமிட்டபடி மே மாதத்தில் பள்ளிகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 264-ஐ கடந்துள்ளது. கொரோனாவின் தாக்குதல் மிக மோசமானதாக இருப்பதால், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் முடுக்கிவிட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், வெளிநாட்டினர் வருவதற்கு அங்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் தென்பட தொடங்கியிருப்பதால், இனியும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது சரியாக இருக்காது என அந்நாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், கொரோனா குறித்து ஆப்பிரிக்கா விழித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.