கொரோனா வைரஸ்

இந்தியாவில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் நகரமாக மாறியது புவனேஸ்வர்

இந்தியாவில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் நகரமாக மாறியது புவனேஸ்வர்

Veeramani

கோவிட் -19 க்கு எதிராக 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்ட இந்தியாவின் முதல் நகரமாக ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வர் மாறியுள்ளது.

இது குறித்து பேசிய புவனேஸ்வர் மாநகராட்சியின் தென்கிழக்கு மண்டல துணை ஆணையர் அன்ஷுமன் ராத், “புவனேஸ்வரில் உள்ள 100 சதவீத மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனுடன், நகரத்தில் உள்ள ஒரு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புவனேஸ்வர் மாநகராட்சி தனது மக்கள்தொகையில் 100 சதவீத மக்களுக்கு ஜூலை 31 க்குள் தடுப்பூசி செலுத்தியுள்ளது. இந்த நேரத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட மொத்தம் 9,07,000 பேருக்கு இரண்டாவது டோஸ்  தடுப்பூசி வழங்கினோம். சுமார் 31,000 சுகாதாரப் பணியாளர்கள், 33,000 முன்களப் பணியாளர்கள், 18-45 வயதுக்குட்பட்ட 5,17,000 பேர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட 3,20,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூலை 30 வரை சுமார் 18,35,000 டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுஎன தெரிவித்தார்

தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட, புவனேஸ்வர் முழுவதும் 55 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது, நகரத்தில் 10 டிரைவ்-த்ரூ தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக, பள்ளிகளுக்குள் 15 நோய்த்தடுப்பு மையங்கள் உருவாக்கப்பட்டன.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பைப் பாராட்டிய அன்ஷுமன் ராத், “கோவிட் தடுப்பூசி பிரச்சாரத்தை மிகப் பெரிய வெற்றியாக மாற்றியதற்காக, மாநகராட்சி சார்பில், புவனேஸ்வர் மக்களுக்கு நன்றி கூறுகிறேன். அரசுப் பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன், புவனேஸ்வர் நகரம் 100 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி அளித்த நாட்டின் முதல் நகரமாக மாறியுள்ளதுஎன தெரிவித்தார்