கொரோனா வைரஸ்

பயன்பாட்டுக்கு வந்தது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து

Sinekadhara

பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘இன்கோவாக்’ என்ற மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.

சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூக்கு வழியாக் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை டெல்லியில் இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த தடுப்பு மருந்தானது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மூக்கு வழி தடுப்பு மருந்தை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பு மருந்துதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்களும் மூக்கு வழி தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.