பெங்களூருவில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பெங்களூருவில் இதுவரை மொத்தம் 82.7 லட்சம் பேருக்கு முதல் டோஸூம், 32 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இதுவரை மொத்தம் 1,14,93,814 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பெங்களூரு மகாநகர தலைமை ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்தார். " பெங்களூரு மக்கள் தொகையில் 76 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 30 சதவிகிதம் பேருக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து கர்நாடக அரசு ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 4.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. கர்நாடகாவில் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் 3.3 கோடி பேருக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசி 1.1 கோடி பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் ஆறு லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 43.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாட்டில் பெருநகரங்களில் தடுப்பூசி வழங்குவதில் பெங்களூரு புது டெல்லிக்கு (1,41,02,635) அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக மும்பை (1,02,67,836), கொல்கத்தா (60,11,947) மற்றும் சென்னை (52,24,615) முறையே 3 வது, 4 வது மற்றும் 5 வது இடங்களில் உள்ளன என்று கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.