வாணியம்பாடியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி. உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அவரது உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நோய்தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே காமராஜபுரம் பகுதியில் அரசு சார்பில் மின்மயானமும் சுடுகாடும் அருகருகே உள்ளது. இதனால் சடலத்தை புதைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது உயிரிழந்தவரின் உடலை அங்கு அடக்கம் செய்வதற்காக வந்த நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை தடுத்து நிறுத்தி ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அடக்கம் செய்வதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது