ஊரடங்கைப் பயனுள்ளதாக்கவும், உங்களது நேரத்தைப் பயனுள்ள வகையில் மாற்றுவதற்கும் கற்பதற்கும் பல செயலிகள் (ஆப்ஸ்) இருக்கின்றன. அவை பற்றிய சிறு அறிமுகத்தை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ஸ்கை மேப்:
வானியலைப் பற்றித் தெரிந்துகொள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் ஸ்கை மேப். பகலில் சூரியன் எந்தத் திசையில் இருக்கிறது என்பதை நம்மால் சொல்லிவிட முடியும். ஆனால், சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்கள் பகல் நேரத்தில் எந்தத் திசையில் இருக்கின்றன என்பதை நம்மால் கூற இயலாது. அது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள இந்த ஆப் உதவுகிறது. மேலும் சூரியன், செவ்வாய், புதன் உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள், பால் வீதிகள் எனப் பலவற்றைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஆப் உதவுகிறது. இந்த ஆப்பில் கிரகங்களின் பெயர்களைக் கொடுத்து தேடினால், அது இருக்கும் திசைக்கு உங்களை அழைத்துச்செல்லும்.
இதேபோல ஸ்கை வியூ என்றொரு ஆப்பும் பால் மண்டர்களைக் குறித்து அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் கிரகங்கள் பெரிதாகவும், நட்சத்திரக் கூட்டங்களை உருவங்களாகவும் கூடுதல் விவரங்களோடு எடுத்துத் தருகிறது. கொள்ளளவு 51 எம்.பி மட்டுமே. 5.0 ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இது செயல்படும்.
திருக்குறளின் மொத்த தொகுப்பும் தற்போது ஆப் வடிவில் வந்திருக்கிறது. இந்த ஆப்பில் குறளுடன் அதற்கான ஆங்கில வடிவமும் உள்ளது. இதில் மணக்குடவர், பரிமேலழகர், மு.வரதராசனார், சாலமன் பாப்பையா, மு.கருணாநிதி ஆகியோரது குறள் உரைகளை அடுத்தடுத்து கொடுத்திருப்பது தனிச்சிறப்பு. இதில் உங்களுக்குப் பிடித்தமான குறள்களை ‘லைக்’செய்வது போல் குறியிட்டு வைத்துக்கொள்ளலாம். இதன் கொள்ளளவு 4.2 எம்.பி மட்டுமே. இதனை 4.0 ஆண்ட்ராய்டு வெர்ஷன் கொண்ட மொபைல் போன்களில் பயன்படுத்த முடியும்.
பிரெய்ன் டிரெய்னிங் ஆப்:
இந்த ஆப் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் சின்ன சின்ன விளையாட்டுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சிந்தனைத் திறன், முடிவெடுக்கும் திறன், கூர்ந்த கவனிக்கும் திறன், ஆகியவற்றை இந்த ஆப் மூலம் செம்மைப்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆப்பில் போகஸ், மெமரி, இன்டலிஜென்ஸ் என்ற மூன்று பிரிவுகளில் கேம்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெயர்கள், எண்கள், புதிய தகவல்கள் மற்றும் முக்கியமானவற்றை நினைவில்கொள்ள ஏதுவாகவும் கேம்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கேம்ஸ் நமது மூளைத்திறனை மதிப்பீடு செய்ய உதவுகிறது. கொள்ளளவு 4.1 எம்.பி. 4.1 ஆண்ட்ராய்டு வெர்ஷன் கொண்ட மொபைல் போன்களில் பயன்படுத்தமுடியும்.
மேத்ஸ் பார்முலா என்ஜினீயரிங் ஆப்:
மாணவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆப் கணக்கில் உள்ள சிரமங்களைக் களைய உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஜினீயரிங் கணக்கு பாடங்களில் பயன்படுத்தப்படும் பார்முலாக்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக ஜியோமெட்ரி, டெரிவேட்டிவ், இன்டெக்ரேஷன், டிரைகோணமெட்ரி உள்ளிட்ட பல தலைப்புகளில் பார்முலாக்கள் உள்ளன. கணக்கில் ஆர்வமுடைய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அனைத்து பார்முலாக்களும் எளிமையான விளக்கங்களோடு கொடுக்கப்பட்டுள்ளன. இதன் கொள்ளளவு 4.7 எம்.பி. 4.0 ஆண்ட்ராய்டு வெர்ஷன் கொண்ட மொபைல் போன்களில் பயன்படுத்தமுடியும்.