கொரோனா வைரஸ்

அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு : ராகுல்காந்தி

Veeramani

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

உலகளாவிய கோவிட் இறப்பு எண்ணிக்கையை பகிரங்கப்படுத்தும் உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது என்று  தெரிவித்த நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த ராகுல் காந்தி, "மோடி உண்மையைப் பேசவும் இல்லை, மற்றவர்களைப் பேச விடவும் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர் இன்னும் பொய் சொல்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.



மேலும்,"நான் முன்பே கூறியிருந்தேன், கோவிட் காலத்தில் அரசாங்கத்தின் அலட்சியத்தால், ஐந்து லட்சம் அல்ல, 40 லட்சம் இந்தியர்கள் இறந்தனர். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள் மோடி, கொரோனாவால் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குங்கள்" என்று கூறினார்.

நாட்டில் கோவிட் -19 இறப்புகளை மதிப்பிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிமுறைகள் குறித்து இந்தியா கேள்வி எழுப்பியது, புவியியல் அளவு மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட இவ்வளவு பெரிய தேசத்தின் இறப்பு புள்ளிவிவரங்களை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற கணித மாதிரியைப் பயன்படுத்த முடியாது என்று இந்தியா தெரிவித்தது.



ஞாயிற்றுக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,21,751 ஆக உள்ளது.