கொரோனா வைரஸ்

மறைக்கப்படுகிறதா கொரோனா பலி ? டைம்ஸ் ஆஃப் இந்தியா அதிர்ச்சி கட்டுரை

மறைக்கப்படுகிறதா கொரோனா பலி ? டைம்ஸ் ஆஃப் இந்தியா அதிர்ச்சி கட்டுரை

Rasus

ஜூன் 8-ஆம் தேதி வரை சென்னையில் 224 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அன்றைய தினம் வரை சென்னையில் 460 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக சென்னை மாநகராட்சி இறப்பு பதிவேட்டு விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு தற்போது பெரிதும் பேசப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 8-ஆம் தேதி வரை சென்னையில் 224 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அன்றைய தினம் வரை சென்னையில் 460 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக சென்னை மாநகராட்சி இறப்பு பதிவேட்டில் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பொது சுகாதார இயக்குநரகத்தின் அதிகாரிகள் சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி கண்காணிக்கும் இறப்பு பதிவேட்டில், மாநில பதிவேட்டை விட கூடுதலாக 236 கொரோனா இறப்புகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கையை கணக்கிட்டால், மாநில அரசு தெரிவித்த 0.7 சதவீத கொரோனா இறப்பு விகிதம் என்பது 1.5 சதவீதம் என்ற கணக்கில் உயரும்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “எந்தவொரு மரணத்தையும் மறைக்க நாங்கள் விருப்பமில்லை. வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறோம். இந்த மறு ஆய்வு அதனையே காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறும்போது, “அனைத்து அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகள், கொரோனா குறித்த இறப்பு விவரங்களை இமெயில் வாயிலாக மாநிலம் மற்றும் கார்ப்பரேஷனுக்கு வழங்கி வருகின்றன. ஆனால் சில மருத்துவமனைகள் அதனை செய்வதில்லை. அதற்கான காரணத்தை கண்டறிந்து வருகிறோம். இந்த இறப்பு விவரங்களை சரிபார்ப்பிற்கு பின் இணைத்துக் கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.

இதனிடைய பொது சுகாதாரத்துறை இயக்குநர், கொரோனா உயிரிழப்பு குறித்து கண்காணிக்க 11 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். அத்துடன் மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை பதிவான கொரோன உயிரிழப்பு குறித்து விவரங்களை மாநில சுகாதார அமைப்பிற்கு அனுப்பவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தினசரி பதிவாகும் கொரோனா உயிரிழப்பு குறித்த விவரங்களை அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது , குறைவான பணியாளர்களே பணியில் இருப்பதால் மாநில இறப்பு பதிவேட்டில் சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.