கொரோனா வைரஸ்

பழனி அரசு மருத்துவமனையில் 4 நாட்களில் 10 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

பழனி அரசு மருத்துவமனையில் 4 நாட்களில் 10 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

kaleelrahman

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பழனியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் 260 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பழனி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா அறிகுறியுடன் பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருப்பவர்கள் என தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் இரு பிரிவுகளிலும் தங்க வைக்கப்பட்டவர்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக மூச்சுத்திணறலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் கேட்டபோது, போதிய அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறினார். ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழந்ததாக கூறுவதில் உண்மை இல்லை என்றும், நோயாளிகளின் நோய் எதிர்ப்புத் திறனை பொறுத்தே உயிரிழப்பு நேரிடுவதாகவும் அவர் கூறினார்.