சினிமா

உ.பி.முதல்வர் கதையை தவறாகச் சித்தரிப்பதா? ’ஜிலா கோரக்பூர்’ படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு!

webteam

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை தவறாகs சித்திரிப்பதாகக் கூறி ’ஜிலா கோரக்பூர்’ படத்தை எதிர்த்து பாஜக வழக்கு தொடுத்துள்ளது.

'ஜிலா கோரக்பூர்' என்ற பெயரில் இந்தியில் படம் ஒன்று தயாராகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல காவி உடையணைந்த ஒருவர் மொட்டைத் தலையுடன் பின்புறமாகக் கைகட்டி நிற்கிறார். அவர் கையில் துப்பாக்கி இருக்கிறது. கோரக்பூரின் பாபா கோரக்நாத் கோயிலின் ஓரு பகுதியும் பசுமாடுவும் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை கதைதான் என்றும் கோரக்நாத் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான மடத்தின் மடாதிபதியாகவும் யோகி இருந்து வருகிறார் என்றும் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பாஜக கூறுகிறது.

இதையடுத்து உத்தரப்பிரதேச பாஜக தலைவர் ஐ.பி.சிங், படத்தின் இயக்குனர் வினோத் திவாரி மீது லக்னோ போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் பசு பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான படுகொலைகளை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருப்பதாக புகாரில் கூறப்பட்டுள் ளது. இதையடுத்து படத்துக்கு எதிராக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'இந்தப் படத்தைத் தயாரிக்க பணம் கிடைத்தது எப்படி என்பதை விசாரிக்க வேண்டும். புண்ணியத்தலமான கோரக்பூரின் பெயரையும் கெடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் திவாரி. அவர் எல்லையை தாண்டிவிட்டார். இந்து கலாசாரத்தின் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறார். எனவே, இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்' எனத் தெரிவித்துள்ளார் ஐ.பி.சிங்