தனுஷ் நடிக்கும் மாரி 2க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
தனுஷை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இசை ரீதியாக பெரிய வெற்றியை அடைந்தது இந்தத் திரைப்படம். அதனை தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ’புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ‘ட்ரீம்ஸ்’, ‘புதுப்பேட்டை’, ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’, ‘யாரடி நீ மோகினி’ என யுவன் இசையில் தனுஷ் படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் ‘யாரடி நீ மோகினி’ படப் பாடல்கள் இசை ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது.
அதன் பிறகு இந்த ஜோடி இணையவே இல்லை. கடந்த பத்து வருடங்களுக்குப் பிறகு தற்சமயம் தனுஷ் நடித்து வரும் ’மாரி2’க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. அதைபோலவே யுவன் இணைக்கிறார் என்பதும் இப்போது ஹைலைட் ஆகி உள்ளது.
கடந்த சில வருடங்களாக அனிருத், ஷான் ரோல்டன் என இளம் இசையமைப்பாளர்கள் பக்கம் இணைந்து பணியாற்றி வந்த தனுஷ் மீண்டும் யுவன் பக்கமே சார்ந்திருப்பதால் அனிருத் உடன் இனி அவர் சேரப்போவதில்லை என்பதாக செய்தியும் பரவி வருகிறது.