சினிமா

25 வருட இசைப் பயணம்: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

webteam

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்களை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் யுவன் 150-க்கும் மேலான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1997-ம் ஆண்டு வெளியான `அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த யுவன், பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

தமிழ் மட்டுமில்லாது, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் பணியாற்றி இந்திய அளவில் அறியப்படும் சினிமா கலைஞராக யுவன் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 31-வது பட்டமளிப்பு விழாவில் யுவனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 16 வயதில் இசையமைப்பாளராகி 25 வருட இசைப் பயணத்தை கடந்திருக்கும் யுவன் சங்கர் ராஜாவை கௌரவிக்கும் விதமாக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’16 வயதில் சினிமாவுக்குள் நுழைந்து 25 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். யுவனின் பங்களிப்பை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.