மம்மூட்டி நடிப்பில் ஜிதின் கே ஜோஷ் இயக்கியுள்ள படம் `களம்காவல்'. இப்படத்தின் Pre Release நிகழ்வு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இப்படத்தில் கொடூரமான வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார் மம்மூட்டி. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மம்மூட்டி பேசிய போது "இது மம்மூட்டி கம்பெனியின் 7வது படம். என் படம் ஒரு இடைவெளிக்குப் பின் வெளியாகிறது. இப்படம் வெளியாக சில காலதாமதம் ஏற்பட்டது, அதற்கான காரணம் அனைவரும் அறிந்தததே. நான் எல்லா படத்தையும் ரசித்து, பிடித்து தான் செய்கிறேன். ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் வரவேற்கும் போது, இனியும் நல்ல படங்கள் கொடுக்கலாம் என்ற நிம்மதி வருகிறது. அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வருகிறது. அப்படியான ஒரு படம் தான் இந்த படமும். இது ஒரு பரிசோதனை முயற்சி என நான் சொல்லமாட்டேன். சினிமாவே ஒரு பரிசோதனை முயற்சிதான், 10 கோடியில் செய்தாலும் சரி 100 கோடியில் செய்தாலும் சரி பரிசோதனை முயற்சிதான். அந்தப் படம் வெற்றி பெரும் வரை அது பரிசோதனை முயற்சியே, வெற்றி பெற்ற பின் தான், அது ஜெயித்த சினிமாவாகிறது.
இதுவும் அப்படியான படம் தான். ஆனால் இதில் சினிமா பரிசோதனை முயற்சி அல்ல, என்னுடைய கதாபாத்திரம் தான் பரிசோதனை முயற்சி. இந்தப் படத்தில் நான் நடித்துள்ள பாத்திரத்தை, நீங்கள் எளிதில் விரும்பவோ, அன்பு செய்யவோ இயலாது. ஆனால் சினிமா முடிந்த பின் இந்த பாத்திரத்தை உங்களால் தியேட்டரில் விட்டுவிட்டு செல்ல முடியாது. எனக்கு இந்தப் படத்தில் முதலில் கொடுக்கப்பட்ட ரோல், போலீஸ் அதிகாரி பாத்திரம் தான். அதை என்னைவிட சிறப்பாக விநாயகன் தான் செய்வார் என தோன்றியது. இந்தப் படத்தின் நாயகன் விநாயகன் தான். நானும் நாயகன் தான், ஆனால் எதிர் நாயகன். இத்தனை காலம் ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான், இப்படியான பாத்திரத்தில் நடிக்க எனக்கு தைரியத்தை கொடுத்தது. கடந்த 45 ஆண்டுகள் உங்களை நம்பி மட்டுமே நான் இங்கு நிற்கிறேன்.
இந்தப் படத்தில் என்னையும் விநாயகனையும் தவிர மற்ற பாத்திரங்கள் மிக குறைவு. மீது எல்லாம் பெண் பாத்திரங்கள் தான். இத்தனை பெண்கள் இணைந்து நடித்த படம் எதுவும் இருக்குமா என தெரியவில்லை. அவர்களின் ஒத்துழைப்பு இந்தப் படத்தில் முக்கியமான ஒன்று. வகுப்பறையில் சேட்டைகள் செய்யும் பிள்ளைகள் இருக்கும். ஆனால் சேட்டை செய்யும் சிலரை நமக்கு பிடிக்கும். அப்படியான ஒரு ஆள் தான் விநாயகன். அவர் நிறைய சேட்டை செய்வார் என்றாலும், அவரது சினிமாக்களை பார்க்கையில் அவர் மீது ஒரு அன்பு நமக்கு வரும். இது நாம் பார்க்காத விநாயகன் என தோன்றும், ஆனால் நாம் பார்க்காத விநாயகன் இதைவிட மிக நல்லவன். அதை நாம் பார்க்கவில்லை அவ்வளவு தான்" என்றார்.