கமல்ஹாசன் NDTV நேர்காணலில், 'நீங்கள் பேசுவது புரியவில்லை' என்ற கேள்விக்கு, 'புரியாத மாதிரி சொல்றாங்க, ஆனா நான் உங்களுக்கு புரியவரைக்கும் சொல்லிகிட்டே இருப்பேன்' என்று கலகலப்பாக பதிலளித்தார். அவர் அரசியல் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் மநீம கட்சி தீவிரமாக செயல்படுகிறது.
இந்திய சினிமாவில் மூத்த நடிகரும், முக்கிய நடிகருமானவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய கமல்ஹாசன், மறுபக்கம் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு அவருடைய நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம், உலகளவில் சுமார் 430 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்தசூழலில் தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்துவரும் திமுக உடன் கூட்டணியில் இருந்துவரும் கமல்ஹாசனின் மநீம கட்சி, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருக்கும் கமல்ஹாசன், அவர் சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்..
கமல்ஹாசன் ஒரு கருத்து தெரிவித்தால் அது புரியாது என்றும், அது தலையை சுற்றி தொடுவது போல குழப்பமானது என்றும் பொதுவான கருத்து இருந்துவருகிறது.
இந்நிலையில் NDTV உடனான நேர்காணலில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம், நீங்கள் பேசுவதே புரியவில்லை என்று கூறுகிறார்களே என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “சில சமயம் என்ன கெட்ட வார்த்தைல திட்டுவாங்க, அப்போ என்னங்க சொல்றீங்க, எனக்கு புரியலங்கனு சொல்றது தான் சரியான பதிலா இருக்கும், ஏன்னா நீங்க இப்படி தான் சொல்றீங்களானு நாம கேட்டு, அவர் ஆமான்னு சொல்லிட்டாருனா என்ன பன்றது. அதாவது புரிஞ்சாலும் புரியாத மாதிரி விட்டுடுவாங்க, ஒருவேளை புரிஞ்சிடுச்சுனா அவங்க பதில் சொல்ல வேண்டியிருக்குமே, அதனால புரியாத மாதிரி சொல்றாங்க. ஆனா நான் உங்களுக்கு புரியவரைக்கும் சொல்லிகிட்டே இருப்பேன்” என்று கலகலப்பாக பதில் சொன்னார்.
மேலும் அரசியல் தலைவர்கள் கூட பேசும்போது இப்படி தான் பேசுவிங்களா, இப்போ நீங்க கட்சி வச்சிருக்கீங்க, முக ஸ்டாலின் கிட்ட கூட்டணி பேசப்போறீங்க அப்போ எப்படி பேசுவீங்க? என்ற கேள்விக்கு, நான் எப்படி பேசுவன்னு நீங்க அவங்க கிட்ட தான் கேட்கனும். அந்த உண்மையை அவங்க தான் சொல்லனும் என்று பதிலளித்தார்.
அதற்கு அங்கயும் உங்க உரையாடல் இப்படி தான் இருக்குமா..? “அது ஆஃப் கேமரால பேசுற விசயம், உங்க கேமரா முன்னால எப்படி சொல்ல முடியும்” என்றார். அப்போ கமல்ஹாசன் ஆன் கேமரா, ஆஃப் கேமரா இரண்டிலும் வேறுவேறா பேசுவாரா?, “ஆமாம், நான் ஒரு நடிகன்” என்றார். இதை அரசியல் சார்ந்த பதிலாக எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு, ’கண்டிப்பாக இது ஒரு அரசியல் சார்ந்த பதில் தான்’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.