யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வித்தியாசமான நகைச்சுவை மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துள்ளவர் யோகி பாபு. கடைசியாக இவர், விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ‘தர்ம பிரபு’, ‘ஜாக்பாட்’, ‘கூர்கா’, ‘ஜாம்பி’, ‘மண்டேலா’ வரிசையில் ‘பொம்மை நாயகி’ என்றப் படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யோகி பாபுவின் ‘மண்டேலா’ திரைப்படம் தேசிய விருதுகளை வென்றிருந்த நிலையில், அதேபோன்றதொரு கதையம்சம் கொண்டப் படமாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஷான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுபத்ரா, ஸ்ரீமதி, அருள்தாஸ், ஜி.எம். குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. வருகிற பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. சமூக அக்கறை கொண்டப் படமாக உருவாகியுள்ளது இந்தப் படம்.
ட்ரெய்லரில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் யோகி பாபு. படம் மிகவும் அழுத்தமான காட்சிகளுடன் எடுக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் காட்டுகிறது. மகளை படிக்க வைக்க நினைக்கும் ஒரு தந்தை - தாயின் ஆசை, அந்த குழந்தை காணாமல் போன பின்னர் அதனை தேடி காவல் நிலையம், நீதிமன்றம் சென்று போராடும் ஒரு தந்தையின் போராட்டம் ஆகியவைதான் பொம்மை நாயகியின் கதைக்களம் போல் உள்ளது.
‘தப்பு செஞ்சவனெல்லாம் சந்தோஷமா இருக்கலாம்.. பாதிக்கப்பட்டவங்க.. என்ன நியாயம் சார் இது.. அவங்க எந்த கோர்ட்டுக்கு வேணும்னாலும் போகட்டும் சார் நாம போலாம் சார்.. போற உயிர் அவங்க கிட்ட அப்படியே போராடியே போகட்டும் சார்’ போன்ற வசனங்கள் மிகவும் அழுத்தமாக உள்ளது. குறிப்பாக பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ட்ரெய்லர் வரும் பின்னணி இசை நெஞ்சை உருக்குவது போல் உள்ளது.