சினிமா

விஜய் உடன் ஐந்தாவது முறையாக இணைந்த பிரபல காமெடி நடிகர் - வெளியான ‘தளபதி 66‘ அப்டேட்

விஜய் உடன் ஐந்தாவது முறையாக இணைந்த பிரபல காமெடி நடிகர் - வெளியான ‘தளபதி 66‘ அப்டேட்

சங்கீதா

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் நடிகர் விஜயின் ‘தளபதி 66’ படத்தில், நடிகர் யோகி பாபு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ வெற்றிப்படத்திற்குப் பிறகு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடைசியாக நடித்திருந்தப் படம் ‘பீஸ்ட்’. கடந்த மாதம் 13-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, நடிகர் விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் புதியப் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரிக்கிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 66’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக, பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதேபோல் இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷாம் நடிக்கிறார். சீனியர் நடிகரான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் நிறைவடைந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக விஜய், கடந்த திங்கள்கிழமை மீண்டும் ஹைதராபாத் புறப்பட்டு சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் யோகி பாபு பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அந்த பதிவின் மூலம் இதனை உறுதி செய்துள்ளார். எனினும், படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கவில்லை.

விஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் யோகி பாபு நடித்திருந்த நிலையில், தற்போது ‘தளபதி 66’ படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.