Yash Toxic
சினிமா

அப்பா, மகன்... இரு வேடங்களில் யஷ்? வெளியானது டாக்சிக் டீசர் | Toxic | Yash | Geethu Mohandas

இப்படத்தில் யாஷ் நடித்துள்ள ராயா பாத்திரத்தின் அறிமுக டீசர் யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ம் தேதி  வெளியிடப்பட்டது.

Johnson

கே ஜி எஃப் படத்தின் இரு பாகங்களுக்கு பிறகு இந்திய முழுக்க பிரபலமானார் கன்னட நடிகர் யஷ். அதற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா எனப் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் யாஷ் நடித்துள்ள ராயா பாத்திரத்தின் அறிமுக டீசர் யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ம் தேதி  வெளியிடப்பட்டது. இன்று இப்படத்தின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் கேங்ஸ்டர் கதையாக விரிகிறது.

பரபரப்பான ஆக்ஷன் படமான இதில் அப்பா, மகன் என இரு பாத்திரங்களில் யஷ் நடித்துள்ளார் என்பதை, இந்த டீசரில் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு முன் `கஜகேசரி' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் யஷ். ஆனால் அது இருவேறு காலகட்டங்களில் நடக்கும் கதை. எனவே ஒரே திரையில் இரு பாத்திரங்களாக யஷ் வர உள்ள முதல் படம் இதுதான். இப்படம் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மார்ச் 19, 2026 வெளியாகவுள்ளது.